அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும் என்றும், இது அரசுக்குக் கிடைத்த பின்னடைவு அல்ல என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:
“அமைச்சர் கே.என். நேரு மீது சிபிஐ விசாரணை நடைபெற்றபோது, அமலாக்கத்துறை சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறியது. ஆனால், சிபிஐ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், அமலாக்கத்துறை அளித்த தகவலின் பேரில், தமிழ்நாடு அரசே விசாரணை நடத்த உத்தரவிட்டது.
கே.என். நேரு கட்சியின் மூத்த தலைவர், முதன்மைச் செயலாளர் என்றெல்லாம் பார்க்காமல், புகார் வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே அரசு விசாரணை நடத்தி வருவதைக் கருத்தில் கொண்டே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது திமுக அரசுக்குப் பின்னடைவு கிடையாது. எங்களது சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே கே.என். நேரு மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. மேலும் அத்தனையையும் சட்டரீதியாகச் சந்தித்து அவர் வென்று காட்டியவர். தட்டத் தட்ட எழும்பும் பந்தைப் போல, இதுபோன்ற பொய் வழக்குகளால் அவர் இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார்,” என்று அவர் தெரிவித்தார்.
