தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை விவாதத்தின் போது, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-வான ஐயப்பன் பேசுகையில், “தமிழகத்தில் திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒரு உறுப்பினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசியது அவையில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“திமுக-வின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி மிகவும் சிறப்பாக அமைந்தது. மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கவே அவரைச் சந்தித்தேன். திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதால், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது.

தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியது குறித்து விளக்கமளித்த ஓ.பி.எஸ், “மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ, அதையே ஐயப்பன் அவையில் எதிரொலித்துள்ளார்,” என்று கூறினார்.

அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நீடித்து வரும் நிலையில், ஓ.பி.எஸ் தரப்பின் இந்தத் திடீர் ‘திமுக ஆதரவு’ நிலைப்பாடு, தமிழக அரசியலில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.