பள்ளி மாணவர்களின் கேலி-கிண்டல் மற்றும் படிப்புச் சிரமத்தால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 13 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் ஜல்னா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டாகாட் பகுதியைச் சேர்ந்த தீபக், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரது மகள் ஆரோகி (13) அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற ஆரோகி, திடீரென பள்ளி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதில் தீவிர காயமடைந்த மாணவியை அங்கிருந்தோர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், ஆரோகி பள்ளியில் சகமாணவர்கள் அவளை அடிக்கடி கேலி-கிண்டல் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மாணவி ஆசிரியர்களிடம் புகார் செய்திருந்தும், எந்தத் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், படிப்பில் கவனம் குறைவதாகக் குற்றம் சாட்டி, பெற்றோரை பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக ஆரோகி கடுமையாக பதட்டமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்திற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.