கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த 41 வயது இளைஞர் தீபக், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அந்த வீடியோ வைரலானதால், மனமுடைந்த தீபக் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தீபக்கின் தாய் அளித்த புகாரின் பேரில், “தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

​இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, ஷிம்ஜிதா தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், முன்ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதன்கிழமை மதியம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஒரு தவறான வீடியோ பதிவின் மூலம் ஒரு மனிதனின் கௌரவத்தைச் சிதைத்து, அவரை மரணத்திற்குத் தள்ளிய இந்தப் பெண்ணுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.