கான்பூரின் சச்சேந்தி பகுதியில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே வந்தபோது, எஸ்.யு.வி காரில் வந்த இருவர் அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர். அதில் ஒருவன் போலீஸ் சீருடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெறிச்சோடிய ரயில்வே தண்டவாளம் அருகே சிறுமியைக் கொண்டு சென்ற அந்த நபர்கள், சுமார் 2 மணி நேரமாக ஓடும் காரிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் நள்ளிரவில் மயக்க நிலையில் இருந்த சிறுமியை அவரது வீட்டு வாசலிலேயே வீசிவிட்டுத் தப்பியோடினர். ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக் கிடந்த தங்கையைப் பார்த்த அண்ணன், பதறியபடி 112-க்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால், “குற்றவாளி ஒரு போலீஸ்காரர்” என்று சொன்னவுடன் உள்ளூர் போலீசார் புகாரை வாங்க மறுத்து அலட்சியம் காட்டியுள்ளனர். அதன்பின்னர், உயர் அதிகாரிகளின் தலையீட்டிற்குப் பிறகுதான் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிவபரன் என்ற உள்ளூர் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அந்தப் போலீஸ் காவலரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
