சமூக வலைதளங்களில் உதவி செய்வதைப் படம் பிடித்து ‘லைக்குகளை’ அள்ளும் போலியான மனிதர்களுக்கு மத்தியில், தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் சாலையோர நடைபாதையில் அமர்ந்து, ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நபர் மிகவும் அக்கறையுடன் பாடம் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றிலும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அந்த குழந்தைகளுக்கு அவர் கல்வி புகட்டும் காட்சி பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

​’அபராஜிதே’ என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த நபர் எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் இதைப் செய்யவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. “போலி இன்ஃப்ளூயன்சர்கள் நிறைந்த உலகில் இவர் ஒரு உண்மையான மனிதர்” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். உதவி செய்வதைக் கண்டென்டாக மாற்றும் இந்த காலத்தில், சத்தமே இல்லாமல் சமுதாய மாற்றத்திற்காக உழைக்கும் இந்த அடையாளம் தெரியாத ஹீரோவுக்கு இணையவாசிகள் தங்களின் சல்யூட்டைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் சின்ன முயற்சி ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.