உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கக்ராலா பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி தாப்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது கையில் அணிந்திருந்த முத்துக்கள் கொண்ட பிரேஸ்லெட்டில் இருந்து ஒரு முத்தை எடுத்து வாயில் போட்டு விளையாடியுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த முத்து அவரது மூச்சுக் குழாயில் சிக்கியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

​உகைனி கிராமத்தைச் சேர்ந்த தேக்சந்த் என்பவரின் ஒரே மகளான தாப்சி, காலையில் ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற நிலையில், பிணமாகத் திரும்பியது அவரது குடும்பத்தாரை நிலைகுலையச் செய்துள்ளது. “பள்ளி ஊழியர்கள் சரியாகக் கவனித்திருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம்” எனத் தந்தை கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பள்ளி சிசிடிவி காட்சிகளைப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. சிறிய முத்துக்கள், நாணயங்கள், சிறிய பொம்மைகள் போன்ற பொருட்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.