பாலிவுட் திரையுலகின் பிரபல சூப்பர் ஸ்டாரான பாபி தியோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் தம்மைக் காரணமாகக் குறிப்பிட்டு ஒரு சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். சுப்மன் கில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு பிரம்மாண்ட இரட்டை சதங்களை அடித்துள்ளார்; அதில் ஒன்று ஒருநாள் போட்டியிலும், மற்றொன்று டெஸ்ட் போட்டியிலும் அடிக்கப்பட்டவை ஆகும். இந்த இரண்டு பெரிய சாதனைகளுக்கு முன்னதாகவும் தான் சுப்மன் கில்லை நேரில் சந்தித்து அவரிடம் கைகுலுக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ள பாபி தியோல், தன்னை அவரது ‘அதிர்ஷ்டக் கை’ என்று சிரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
அனுபமா சோப்ரா வழங்கிய ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ நேர்காணலில் இதுகுறித்து மனம் திறந்துள்ள பாபி தியோல், “நான் சுப்மன் மற்றும் இஷான் கிஷனை சந்தித்தேன். எல்லோரிடமும் கைகுலுக்கினேன். அடுத்த கணம் நான் பார்த்தது, சுப்மன் இரட்டை சதம் அடித்ததுதான். இதோடு கதை முடிந்துவிடவில்லை” என்று ஜாலியாகக் கூறினார். கடந்த ஆண்டு லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹோட்டலுக்கு வெளியே சுப்மன் கில்லை தான் சந்தித்ததாக அவர் தெரிவித்தார். அப்போது அவருடைய சிறப்பான ஆட்டங்களைப் பாராட்டி, வாழ்த்துக் கூறி கைகுலுக்கிவிட்டு இருவருமே அங்கிருந்து சென்றுள்ளனர்.
Bobby Deol shared a story about Rohit Sharma, Virat Kohli, and other players in the gym, and how Shubman Gill went on to score a double century after shaking hands with him.😂❤️ pic.twitter.com/jaZIHpPVIL
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) July 26, 2026
அதன் பிறகுதான் சுப்மன் கில் மீண்டும் ஒரு இரட்டை சதத்தை அடித்துள்ளார் என்று பாபி தியோல் அந்தச் சந்திப்பை நினைவு கூர்ந்தார். சுப்மன் கில் தனது முதல் சர்வதேச இரட்டை சதத்தை கடந்த ஜனவரி 2023-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் குவித்து அசத்தியதன் மூலம் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மாபெரும் இன்னிங்ஸை வெளிப்படுத்தி 269 ரன்களை விளாசினார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் பல்வேறு வடிவங்களிலும் முன்னணி பேட்ஸ்மேனாக சுப்மன் கில் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
