ஜிம்பாப்பே அணிக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும், தனது பந்துவீச்சின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வெறும் 8 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இருப்பினும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை அவரிடம் ஒப்படைத்தபோது, தன் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றிய அபிஷேக் சர்மா, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.
இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அபிஷேக் சர்மா, 2.5 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராட் எவான்ஸ், நியூமேன் ந்யமபுரி மற்றும் ரிச்சர்ட் நகராவா ஆகியோரைத் தனது சுழலில் சிக்க வைத்து அவர் வெளியேற்றினார். இது அவரது டி20 சர்வதேச கரியரின் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பதிவு ஆகும். இந்த 3 விக்கெட்டுகளின் மூலம் அவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் முதல் தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து, தொடக்க வீரராகக் களமிறங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய வீரேந்திர சேவாகிற்குப் பிறகு இரண்டாவது இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரமாகியுள்ளார்.
இதற்கு முன்பு வீரேந்திர சேவாக் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (ODI) இதே போன்றதொரு சாதனையைப் படைத்திருந்தார். அன்றைய போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கி பந்துவீசிய சேவாக், 9 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவே அவரது ஒருநாள் கரியரின் பெஸ்ட் பந்துவீச்சுப் பதிவாகவும் இருந்தது. தற்போது சரியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு அரிய சாதனையை டி20 வடிவத்தில் அபிஷேக் சர்மா நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
அன்று சேவாக் பந்துவீசிய போதிலும் அந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அபிஷேக் சர்மாவின் இந்தச் சூறாவளிப் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்த இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்பே அணியை 90 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
