தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் பேச விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னையில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளரும், தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் நேரில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நான் கடந்த 25 ஆண்டுகளாகத் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். சங்கத்தின் ஒவ்வொரு தேர்தலிலும் எனது ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்றி வருகிறேன். கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதும், அவருடன் வந்து இணைந்து வாக்களித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘இதனை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்களே, உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியால் சற்றே அதிருப்தியடைந்த சுதீஷ், “இங்கு அரசியல் பேச வேண்டாம்; இது முழுக்க முழுக்கத் திரைத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் சமீபத்தில் திமுகவுடன் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து திமுகவுடன் ஒரு நாள் கூட கூட்டணி அமைக்காத கேப்டனின் ஆன்மா பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த செயலை ஒருபோது மன்னிக்காது என எதிர் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இதன் காரணமாகவே செய்தியாளர்கள் அப்படி ஒரு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு எல்கே சுதீஷ் பதிலளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
