தமிழக அரசியலின் ‘பீஷ்மர்’ என்று அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகி, ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (MGR ADMK) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்பது திமுக-விற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் இருக்கும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். “எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கியபோது மக்களிடம் இருந்த அதே போன்றதொரு எழுச்சியும் ஆதரவும் தற்போது விஜய்க்கும் உள்ளது; அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பும் மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளார்” என்று பாராட்டிய அவர், வரும் தேர்தலில் அதிமுக-வின் வாக்குகளை விஜய் கணிசமாகப் பிரிப்பார் என்றும் கணித்துள்ளார்.
88 வயதில் புதிய கட்சி தொடங்கியுள்ள பண்ருட்டியார், தனது இயக்கம் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாது என்றும், ஒத்தக் கருத்துடைய விஜய் தலைமையிலான தவெக-விற்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
