மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 31-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை குவைத் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியது முதல் இதுவரை பல்வேறு தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரு இந்தியரை இன்னும் காணவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அபுதாபி மற்றும் குவைத் பகுதிகளில் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள், அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியப் பணியாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது. இதுவரை சுமார் 4.75 லட்சம் இந்தியர்கள் சவூதி அரேபியா மற்றும் ஓமன் வழியாகப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆர்மீனியா மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் மாற்றுப் பாதைகள் வழியாக இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வர அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. போர்ச் சூழல் மோசமடைந்து வருவதால், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
