சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர்கள் தங்களது தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அப்போது பேசிய அமைச்சர், முதலமைச்சர் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே மின்துறையில் நிலவி வந்த முறைகேடுகளைக் களையப் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் முறைகேடாக வழங்கப்பட்ட டெண்டர்கள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய டிஜிட்டல் போர்டல் வாயிலாக ஒளிமறைவற்ற டெண்டர் முறை அமல்படுத்தப்படும் என்றும், இதில் இடைத்தரகர்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

தற்போது ரூ.2.50 லட்சம் கோடி கடன் சுமையுடன் இயங்கும் மின்துறையை நஷ்டத்திலிருந்து மீட்டு, லாபகரமாக மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இன்னும் ஓராண்டுக்குள் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக டெண்டர் வழங்கும் முறை இனி தொடராது என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணிகள் ஒதுக்கப்பட்டு, வேலைகளை முடித்த நிறுவனங்களுக்குக் காலதாமதமின்றி நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் அணில் மேஷ்ராம் இ.ஆ.ப. மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.