உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில், வீட்டு முன் குப்பை வீச்சும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமும் ஒரு சகோதரன் உயிரிழக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது வீரேந்திரா (40) என்பவர் ஹாப்பூர் நகரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது இளைய சகோதரர் சுனில் சமீபத்தில் அருகாமையில் உள்ள வீட்டில் குடியிருந்தார். சுனிலின் மகள், அண்மையில் வீரேந்திரா வீட்டின் முன் குப்பையை வீசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்த வீரேந்திரா, அந்த பெண்ணை திட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுனில், தனது அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையில் தகராறு முற்றி, ஆத்திரம் அடைந்த சுனில் தனது வீட்டில் இருந்து கோடரியை எடுத்துக்கொண்டு, வீரேந்திராவை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின், சுனிலின் மனைவி குட்டோ, கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார். இதில், பலத்த காயமடைந்த வீரேந்திரா, உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக மீரட் நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, வீரேந்திராவின் மனைவி சஞ்சல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சுனில் மற்றும் அவரது மனைவி குட்டோ மீது கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இருவரும் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.
