காதல் மதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். காதல் ஒரு உணர்வு, அது யாரிடமும் எங்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலியில் நடந்துள்ளது. அங்கு ஒரு முஸ்லிம் இளம்பெண்ணுக்கு இந்து இளைஞனுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் இப்போது எங்கும் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தம்பதியும் திருமணத்திற்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தத் திருமணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது. லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இந்தக் காதல் கதை, பலரையும் கவர்ந்துள்ளது.
கோசியானாவைச் சேர்ந்த பலக்நாஸ் என்ற பெண் ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிகிறார். சாகேத் நகரைச் சேர்ந்த குஷாக்ர பாஜ்பேய் ஒரு மொபைல் கடையில் வேலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளிக்க, காவல்துறை இருவரையும் கண்டுபிடித்தது. ஆனால், பலக்நாஸ், குஷாக்ருடன் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து, விஷ்வ இந்து பரிஷத் (VHP) பிரமுகர்கள் முன்னிலையில், ஒரு கோவிலில் வேத மந்திரங்களுடன் இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பூசாரி துர்கா சங்கர் திரிபாதி இந்தத் திருமணத்தை நடத்தினார்.
அவர் கூறுகையில், “பலக்நாஸ் முதலில் இந்து மதத்தை ஏற்று, பலக் என்று பெயர் மாற்றிக்கொண்டார். பின்னர் குஷாக்ருடன் திருமணம் செய்தார். இப்போது அவர் பலக் பாஜ்பேய் ஆனார். முழு இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது” என்றார். பலக் மற்றும் குஷாக்ர் கூறுகையில், “இந்தத் திருமணத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் காதலை குடும்பத்தினர் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்ததால், வாழ்ந்தாலும், இறந்தாலும் ஒன்றாகவே இருப்போம் என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடினோம். காவல்துறை எங்களைக் கண்டுபிடித்தது. ஆனால், விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் எங்களுக்கு உதவி செய்து, எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர்” என தெரிவித்தனர்.
