தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் வாழப்பாடியில் நடத்திய பிரச்சாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் ஆவேசமாகப் பேசிய அவர், “தமிழகத்தில் சுமார் 2 கோடி குடிகாரர்கள் இருக்கிறார்கள்; அவர்களின் வாக்கு எனக்குத் தேவையில்லை” என அதிரடியாக முழங்கினார்.
மதுவுக்கு அடிமையான ஒருவன் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தலைவனைத் தேர்ந்தெடுத்தால், அந்த நாடு குடியரசு நாடாக இருக்குமா அல்லது குடிகார அரசு நாடாக இருக்குமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மற்ற கட்சிகள் தேர்தலுக்காக டாஸ்மாக் கடைகளை மூடுவோம் எனப் பொய் வாக்குறுதி கொடுப்பார்கள், ஆனால் தான் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டேன் என்றும், தனக்குக் குடிப்பவர்களின் வாக்கு வேண்டாம், உண்மையான குடிமக்களின் வாக்குகளே வேண்டும் என்றும் அவர் பேசியது வைரலாகி வருகிறது.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீமான் பேசிய இந்தத் துணிச்சலான பேச்சு, சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
