நடிகர் விஜய்க்கு அரசியல் பக்குவமோ அல்லது தமிழகத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ இல்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு அவரது கட்சி காணாமல் போய்விடும் என்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் ‘மக்களுக்காக மக்களிடமிருந்து’ தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வாகனத்தை ராம சீனிவாசன் சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக, பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விளாத்திகுளம் பகுதியில் ரயில் தடம் அமைக்கும் திட்டம் மற்றும் பம்பை – அச்சன்கோவில் – வைப்பார் நதிநீர் இணைப்புத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்த நீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தட்டுப்பாடின்றித் தண்ணீர் கிடைக்கும். ஆனால், ஆற்றில் மணல் அள்ளுவதிலேயே திமுக அரசு குறியாக உள்ளது.
எங்கள் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்து வழிகாட்டுவார் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். எங்களுக்கான வழிகாட்டுதல்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடமிருந்து வரும். தற்போது எங்கள் கூட்டணியில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேலும் பல முக்கிய கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன. ஓ.பன்னீர்செல்வமும் பாஜக – அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
விஜய் தற்போது ‘விசில்’ சின்னம் பெற்றுள்ளார். டிடிவி தினகரன் அல்லது காங்கிரஸார் தன்னுடன் வருவார்கள் என அவர் எதிர்பார்த்தார். குக்கரில் விசில் இருக்கும் என்று அவர் நினைத்தது நடக்கவில்லை. கைதட்டலுக்காகப் பேசும் அரசியல் தான் விஜய்யின் அரசியல். அவருக்குத் தீர்க்கமான சிந்தனையோ, அரசியல் தெளிவோ கிடையாது. ரசிகர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சியை நடத்திவிட முடியாது. தேர்தலுக்குப் பிறகு விஜய் கட்சி என்ற ஒன்று இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
