ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை மற்றும் நகைகளை, ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த இரண்டு பெண்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள மேல்பாலை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பின், ராணுவம் மற்றும் ரயில்வே துறை சார்பில் அவரது மனைவி தேவிக்கு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

கணவனை இழந்து இரு மகன்களுடன் வசித்து வந்த தேவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற பெண் நட்பாகப் பழகியுள்ளார். கல்பனாவின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால், இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவானது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட கல்பனா, தேவியின் பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டார்.

தனது குழுவில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் லாபம் கிடைக்கும் எனக் கூறி முதற்கட்டமாகப் பணம் வாங்கிய கல்பனா, பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி தேவியிடமிருந்து சுமார் ரூ.30 லட்சம் வரை பறித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது தோழியும் தனியார் கல்லூரி ஊழியருமான மற்றொரு பெண்ணை ‘வங்கி மேனேஜர்’ என தேவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்தப் பெண், தேவி ஒரு விதவை என்பதால் அரசு சலுகைகள் பெற்றுத் தருவதாகக் கூறி, வரி மற்றும் கட்டணம் என்ற பெயரில் ரூ.70 லட்சத்தை ஏமாற்றிப் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி, தேவியிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகளையும் இருவரும் வாங்கிக் கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக ரூ.1.30 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை இழந்த தேவி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்கள் தேவிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த தேவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட கல்லூரி ஊழியர் 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்திப் பலரை ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள கல்பனா மற்றும் அவரது தோழியைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.