நாயகன் சௌந்தரராஜா தன் மனைவி தேவனந்தாவை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குத் தங்கச் செல்கிறார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருநாள், தன் கையிருப்பில் உள்ள பணம் மற்றும் நகைகளை அந்த வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு, “சில நாட்களில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி மனைவியைத் தனியாக விட்டுச் செல்கிறார் சௌந்தரராஜா. ஆனால், அவர் இரண்டு வருடங்கள் ஆகியும் திரும்ப வரவில்லை.
இந்நிலையில், தனியாக இருக்கும் தேவனந்தாவின் வீட்டுக்கு, “என்னை பாம்பு கடித்துவிட்டது” என்று பொய் சொல்லி உதவி கேட்டு வருகிறார் சந்தோஷ் தாமோதரன். வந்த இடத்தில் தேவனந்தாவின் அழகைப் பார்த்து அவர் மீது ஆசைப்படுகிறார். அதோடு, அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நகைகளையும் தேடுகிறார். இறுதியில் அந்த நகைகள் யாருக்குக் கிடைத்தது? சௌந்தரராஜா திரும்பி வந்தாரா? தேவனந்தா அந்த வில்லனிடம் இருந்து தப்பினாரா? என்பதே ‘சாயாவனம்’ படத்தின் மீதி கதை.
நாயகன் சௌந்தரராஜாவுக்கு ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டுமே காட்சிகள் உள்ளன, ஆனால் அவர் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி தேவனந்தா துணிச்சலாகவும், அழகாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். வில்லனாக வரும் சந்தோஷ் தாமோதரன் இயல்பாக நடித்துள்ளார். மலைப்பகுதியின் இயற்கை அழகை ஒளிப்பதிவாளர் மிக அழகாகக் காட்டியுள்ளார். பாடல்கள் கேட்கும் ரகத்தில் உள்ளன. ஆனால், கதை மிகவும் மெதுவாக நகர்வது படத்திற்கு ஒரு பலவீனமாக இருக்கிறது.
