மும்பையில் உள்ள தனது குடியிருப்பில், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தும் சம்பவம் குறித்து சமூக ஊடக நட்சத்திரம் உர்ஃபி ஜாவேத் புகார் அளித்துள்ளது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் காலை 5 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் கதையில் பகிர்ந்த உர்ஃபி, இது தனது வாழ்க்கையில் ஏற்பட்ட “பயங்கரமான அனுபவம்” என குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, அதிகாலை 3.30 மணியளவில், தனது மும்பை வீட்டுக் கட்டிடத்தைச் சேர்ந்த இரு ஆண்கள், சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து வீட்டு வாசலில் கதவு மணியை அடித்துக் கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவர் கதவைத் திறந்து பார்த்தபோது, ஒருவன் கதவைத் திறக்குமாறு வற்புறுத்தியதாகவும், மற்றொருவர் அருகில் நின்றுகொண்டிருந்ததாகவும் கூறினார்.
இதுகுறித்து ETimes-க்கு பேசிய உர்ஃபி ஜாவேத், “அவர்கள் வெளியேறுமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்தனர். காவல்துறையை அழைப்பேன் என்று எச்சரித்த பிறகே அவர்கள் அங்கிருந்து சென்றனர்” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது, தனது சகோதரிகளான டோலி மற்றும் அஸ்ஃபியுடன் வீட்டில் இருந்ததாக உர்ஃபி கூறினார். சம்பந்தப்பட்ட ஆண்கள், அதே கட்டிடத்தின் 13-வது மாடியில் வசிப்பவர்கள் என்றும், அரசியல் தொடர்பு இருப்பதாகக் கூறி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னரும், அந்த ஆண்கள் காவல்துறையினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக உர்ஃபி கூறினார். மேலும், காவல் நிலையத்தில் இருந்தபோது, அவர்கள் சிசிடிவி காட்சிகளை நீக்குமாறு பாதுகாவலரிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆதாரங்களை சிதைக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்றப் பதிவு (NCR) செய்யப்பட்டுள்ளதாகவும் உர்ஃபி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தன்னை மனதளவில் பெரிதும் பாதித்ததாகக் கூறிய அவர், “அதிகாலை 3 மணிக்கு வந்து, ஒரு பெண்ணை கதவைத் திறக்குமாறு வற்புறுத்தி, வெளியேற மறுப்பது மிகவும் பயமுறுத்தும் செயல். தனியாக அல்லது பெண்கள் வசிக்கும் வீடுகளில் இது போன்ற சம்பவங்கள் கடும் அச்சத்தை ஏற்படுத்தும்” என்றார்.
மேலும் தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு தொடர்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக குடியிருப்பு சங்கம் விரைவில் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
