ஜம்மு காஷ்மீரில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தியாவுக்கு எதிராக “பழிவாங்கல்” செய்யவுள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி எடுத்துள்ள சபதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியாகியுள்ள 2 நிமிட வீடியோவில், கசூரி நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து பேசுகிறார். “எங்களின் தீர்மானம் உறுதி வாய்ந்தது. விரைவில் ஜம்மு காஷ்மீரின் ஆறுகள் மற்றும் அணைகள் எங்களுடையதாக மாறும்,” என அவர் தெரிவித்துள்ளதோடு, “இந்த சகோதரரின் இரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்காமல் விடமாட்டோம்,” என்றும் கூறியுள்ளார்.

 

இந்த வீடியோ செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகியதாகவும், இதற்கு முன்னதாக, மே 7 அன்று இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில், ஜெய்ஷ் இ முகமது (JeM) அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டதாக அந்த அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் – குறிப்பாக LeT மற்றும் JeM – திறந்தவெளியில் செயல்பட்டு வருவதும், பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவத்திடம் இருந்து நேரடி நிதியுதவி பெறுவதும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கசூரி, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பின் மூத்த இயக்குநராகவும், அதன் திட்டங்களை ஒருங்கிணைக்கும் மூளையாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கரின் பிற தளபதிகளுடன் நெருக்கமாக செயல்படுவதோடு, தீவிரமயமாக்கல், பயிற்சி மற்றும் தளவாட ஒருங்கிணைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்தியாவினால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் பல இருந்தபோதும், கசூரி பாகிஸ்தானில் பொதுவில் காணப்படுகிறார். மேலும், இந்தியாவுக்கு எதிரான பேரணிகளில் உரையாற்றும், பட்டாளங்களை திரட்டும், மற்றும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அவர் பாதுகாப்பான புகலிடங்களுடன், ISI ஆதரவுடன் இயங்குவதாகவும், அரசியல் பாதுகாப்பும் வழங்கப்படுவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.