கடப்பா: அன்னமய்யா மாவட்டம் புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளே பாலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏற்பட்ட கடுமையான விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரவு 10.30 மணியளவில், ராஜம்பேட்டை மண்டலத்திலுள்ள இசுகபள்ளே பகுதியில் இருந்து ரயில்வே கோடூர் சந்தையை நோக்கி மாம்பழங்களை ஏற்றி வந்த லாரி, ரெட்டிப்பள்ளே தரைப்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த லாரியில் மொத்தம் 18 பேர் பயணித்திருந்தனர். அவர்கள் அனைவரும் மாம்பழ அறுவடையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து மிகவும் பயங்கரமாக இருந்ததால், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் ராஜம்பேட்டை மற்றும் திருப்பதி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, மீட்பு குழுவினர் கிரேன்களை பயன்படுத்தி கவிழ்ந்த லாரியை நகர்த்தி, சிக்கியவர்களை வெளியேற்றினர். விபத்து நிகழ்ந்த இடமான கடப்பா–திருப்பதி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.