குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நேரிட்ட சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாத்வான் தாலுகா, டெடாதரா கிராமம் அருகே, ஸ்விஃப்ட் டிசையர் கார் மற்றும் டாடா ஹாரியர் எஸ்யூவி நேருக்கு நேர் மோதியதில், டிசையர் கார் பள்ளத்தில் விழுந்து உடனடியாக தீப்பற்றி எரிந்தது.
இதில் கார் உள்ளே சிக்கியிருந்த எட்டு பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஐந்து பெண்கள், ஓட்டுநர், மேலும் 10 மாதக் குழந்தையும், 13 வயது சிறுமியும் அடங்குவர். சம்பவ இடத்தில் எவராலும் மீட்க முடியாத நிலையில், தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர்.
அதே நேரத்தில், எஸ்யூவியில் இருந்த மூன்று பேர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குப் பிறகு சுரேந்திரநகர்-வாத்வான் நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவத்தைப் பார்த்தவர்கள் “கார் தீப்பற்றி எரியும் காட்சி பயங்கரமானது” என தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த மோசமான விபத்துக்கு அதிவேகமே காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
