மராட்டிய மாநிலம் நந்தேட் மாவட்டம் உமிர் தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வந்த பிரசாந்த் தோரட் சமீபத்தில் லதூர் மாவட்டம் ரினாபூர் தாலுகாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 8ஆம் தேதி உமிர் தாலுகா அலுவலகத்தில் அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பிரசாந்த் தோரட் தாசில்தார் இருக்கையில் அமர்ந்தபடி 1981ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலை பாடினார். அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் பாடிய இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அரசாங்க அலுவலகத்தில் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி பிரசாந்த் தோரட் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வருவாய் கோட்ட ஆணையர் வெளியிட்ட தகவலில், “அரசு அதிகாரியாக அவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் மராட்டியாவில் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

“>