கோவை சவுரிபாளையம் அய்யப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். அவரது இரண்டாவது மகள் ஸ்ரீஜா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் (Botany) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்பதால், ஸ்ரீஜாவை அரசு கல்லூரியில் மாற்றுவதற்காக சதீஷ்குமார் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த முயற்சிக்கு ஸ்ரீஜா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தனியார் கல்லூரியிலேயே படிக்க விரும்புவதாகவும், தன்னுடைய விருப்பத்தை மாற்ற வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, சதீஷ்குமார், தாவரவியல் படிப்புக்கு பதிலாக அரசு கல்லூரியில் உளவியல் படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் என்று கூறி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஸ்ரீஜா தனது தாய் மற்றும் அக்காவிடம் மனகஷ்டத்துடன்  பேசியதாகவும், அவர்கள் ஆறுதல் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ஸ்ரீஜா, தனக்குத் தேவையான கல்வியை தொடர முடியாமல் போவதற்காக விரக்தி அடைந்து, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.