மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை ஒருவர் தன் இரட்டை பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் சவான் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு வயது மதிக்கத்தக்க இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று ராகுல் சவான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகனத்தில் பயணம் மேற்கொண்டபோது, தம்பதியருக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கோபமடைந்த மனைவி வாகனத்தில் இருந்து இறங்கி தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த ராகுல் சவான், மனைவியிடம் ஏற்பட்ட கோபத்தை தன் குழந்தைகள்மீது காட்டியுள்ளார். இரட்டை பெண் குழந்தைகளையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கேயே இருவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் நேராக வாஷிம் காவல் நிலையத்துக்குச் சென்று, “தான் தன் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டேன்” என ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகளின் உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன. சாட்சிகளை அழிக்க தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இரு குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தந்தையே தன் குழந்தைகளைக் கொன்றது அந்த பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
