ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற ஐந்து குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்த மாற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கும் எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் ஐந்து குழந்தைகள் எச்ஐவி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், ரத்த வங்கியில் இருந்து வழங்கப்பட்ட ரத்த மாதிரிகள் முறையாக பரிசோதிக்கப்படாதது தெரியவந்ததாகவும், பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்த வங்கியில் உள்ள ரத்த மாதிரிகள் தற்போது ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.