மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில், பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை அரசுப் பேருந்தில் தவிக்கவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளைத் தங்களுக்கு அடையாளம் தெரியாது என அவர்களின் சொந்தத் தாத்தாவும் கைவிட்டுள்ள அவலம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, சில காலத்திற்கு முன்பு அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் அந்தப் பெண் வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் ஒரு அரசுப் பேருந்தை தேர்ந்தெடுத்து ஏறியுள்ளனர். பேருந்து இடையில் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது, குழந்தைகளை அப்படியே இருக்கையில் அமரவைத்துவிட்டு, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் ரகசியமாக இறங்கித் தப்பியோடியுள்ளார். பேருந்து புறப்பட்ட பிறகும் நீண்ட நேரமாகத் தாய் வராததால், அந்த இரு குழந்தைகளும் பயத்தில் கூச்சலிட்டு அழத் தொடங்கின.
குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வந்த நடத்துனர், அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுடன் யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாகச் சந்தேகமடைந்த நடத்துனர், குழந்தைகளின் சட்டைக் பையைச் சோதித்துப் பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது.
அதில், “இந்தக் குழந்தைகளுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. தயவுசெய்து இவர்களை எவத்மால் செல்லும் பேருந்தில் ஏற்றி விடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அதற்கு கீழே எவத்மாலில் வசிக்கும் குழந்தைகளின் தாத்தாவின் மொபைல் எண்ணையும் அந்தப் பெண் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, நடத்துனர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்து, குழந்தைகளைப் பத்திரமாகப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், கடிதத்தில் இருந்த மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அது குழந்தைகளின் ரத்த வழித் தாத்தா என்பது உறுதியானது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தாத்தா தனது பேரக் குழந்தைகளை அரவணைத்துக் கொள்வார் எனப் போலீசார் நம்பினர். ஆனால், காவல் நிலையம் வந்த அந்த முதியவரோ, “இவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கும் இவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” எனக் கூறி, சொந்தப் பேரக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டுச் சென்றார்.
பெற்ற தாயும், தாத்தாவும் கைவிட்ட நிலையில், அந்த இரு குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளைப் பஸ்சில் தவிக்கவிட்டு ஓடிய கல்நெஞ்சக் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
