ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தாராவில் மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், முறையான ஆவணங்கள் இருந்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தனது 13 கறவை பசுக்களை மீட்டுத்தரக் கோரி முதியவர் ஒருவர் கண்ணீர் மல்கக் கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் நிலையை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அதாவது  தாக்கூர்ஜி யாதவ் என்ற முதியவர். இவர் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்காகப் பல மாதங்களாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு மாட்டுச் சந்தையில் 13 கறவை பசுக்களை வாங்கியுள்ளார். அவற்றை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, மிகிஜாம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி 13 பசுக்களையும் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்து ஸ்ரீ கிருஷ்ணா கோசாலையில் அடைத்தனர்.

மாட்டுச் சந்தையில் வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இருந்தும், கடந்த 4 மாதங்களாகத் தனது பசுக்களை மீட்க காவல் நிலையத்திற்கும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இந்த முதியவர் அலைந்து திரிந்துள்ளார். இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட பசுக்களில் 11 சினைப் பசுக்கள் கோசாலையிலேயே கன்றுகளை ஈன்றுள்ளன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் 6 கன்றுகள் உயிரிழந்தன. மேலும், பசுக்களின் தீவனம் மற்றும் மருத்துவச் செலவையும் அந்த முதியவரே ஏற்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு  கூட்டத்திற்கு வந்த முதியவர் தாக்கூர்ஜி யாதவ், ஆட்சியரின் காலில் விழுந்து, “ஐயா! அந்தப் பசுக்கள்தான் என் வாழ்வாதாரம். என் குடும்பமே அதை நம்பித்தான் இருக்கிறது. எப்படியாவது என் மாடுகளைக் காப்பாற்றிக் கொடுங்கள்” எனக் கண்ணீர் விட்டுக் கதறினார்.

முதியவரின் ஆவணங்களைச் சரிபார்த்த மாவட்ட ஆட்சியர் அலோக் குமார், ரசீதுகள் இருந்தும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு போலீஸ் தரப்பு மீது கடும் அதிருப்தி அடைந்தார். உடனடியாக வருவாய் கோட்டாட்சியரை (SDO) தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆட்சியர், “சட்டப்பூர்வமான ரசீதுகள் இருக்கும்போது எதன் அடிப்படையில் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், உடனடியாக அந்தப் பசுக்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி முதியவரிடம் ஒப்படைக்கக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். “ஏழை எளிய மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களை அலைந்து திரும்புவதை இனி சகித்துக் கொள்ள முடியாது” என்றும் அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.இதே கூட்டத்தில், 2010-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த தனக்கு, எவ்வித ஆவணமும் இல்லாததால் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனத் தன் பெற்றோருடன் வந்த ஒரு சிறுமி ஆட்சியரிடம் முறையிட்டார். அந்த மனுவைப் பரிசீலித்த ஆட்சியர், உடனடியாகச் சிறுமிக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு எஸ்டிஓ-வுக்கு உத்தரவிட்டார். மேலும் இதே போன்று பலர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக அவர்கள் அனைவரது கோரிக்கையும் மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.