செகந்திராபாத்தின் கவாடிகுடா பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பியூட்டி பார்லருக்குள் புகுந்து, 25 வயது இளம்பெண்ணை அவரது கணவரே சக ஊழியர்கள் கண்முன்னே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது  பங்கி டெபோரா (25) என்ற இளம்பெண்,  ஒரு பியூட்டி பார்லரில் (ஸ்பா) பியூட்டிஷியனாக வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை மதியம் அவர் வழக்கம் போல் பணியில் இருந்தபோது, அவரது கணவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜு (30) என்பவர் கையில் கூர்மையான கத்தியுடன் பார்லருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே, டெபோராவிடம் ராஜு பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, கண் இமைக்கும் நேரத்திற்குள் கத்தியை எடுத்து டெபோராவைத் சரமாரியாகக் குத்தியுள்ளார். டெபோரா அவரிடமிருந்து தப்பிக்கப் போராடியும், ராஜு அவரை விடாமல் தொடர்ந்து குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த டெபோரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர்  தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு தப்பியோடினார். கவாடிகுடா பிரதான சாலையில் அவர் வேகமாகத் தப்பிச் செல்லும் காட்சிகளை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், போலீசாருக்கு முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், டெபோரா மற்றும் ராஜு தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. டெபோராவின் நடத்தை மீது ராஜுவுக்குக் கடுமையான சந்தேகம் இருந்து வந்ததாகவும், விவாகரத்து வழக்கின் ஆத்திரமும், சந்தேகமும் சேர்ந்தே இந்தத் திட்டமிட்ட கொடூரக் கொலைக்குக் காரணம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் போது போலீசாருக்கு மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. கொலையாளி ராஜு மீது ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கடத்தல் வழக்கில் ராஜு தான் முக்கியக் குற்றவாளி ஆவார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அப்போது மைனராக இருந்த தற்போதைய பாதிக்கப்பட்ட டெபோராவும் அந்தப் பழைய வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அந்தப் பழைய வழக்கின் ரகசியங்களுக்கும் இந்தக் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.