கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், சிறை வளாகத்திற்குள் தற்கொலைக்கு முயன்றதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ஷனின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு ஊகங்கள் பரவத் தொடங்கியதை அடுத்து, இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. செய்தி ஊடகங்களிலும் இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால், ரசிகர்களிடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், நடிகர் தர்ஷன் தற்கொலைக்கு முயன்றதாகப் பரவிய தகவலை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவின் காவல்துறை இயக்குநர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

அப்படி எந்தவொரு அசம்பாவித சம்பவமும் சிறை வளாகத்திற்குள் நடைபெறவில்லை; தர்ஷன் முற்றிலும் நலமாக உள்ளார். எனவே, ரசிகர்களும் பொதுமக்களும் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்றவதந்திகளை நம்ப வேண்டாம், அதனைப் பரப்பவும் வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.