புனேவில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக அவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே தெருவில் வசித்து வந்த இந்த ஜோடி, கடந்த 2024 ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு பொருளாதார ரீதியாகத் தனித்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்தப் பெண் தனது பெற்றோரிடம் உண்மையைச் சொல்லியுள்ளார். மகளின் திருமணத்தை ஏற்க மறுத்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், குடும்பத்தினரின் அழுத்தத்திற்குப் பணிந்த அந்தப் பெண், கணவரைப் பிரிந்து மீண்டும் தாய் வீட்டுக்கே செல்ல முடிவெடுத்தார்.
மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணவர் எவ்வளவோ அழைத்தும், அந்தப் பெண் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த சட்டப் போராட்டத்தினால் கணவருக்கு ஏற்பட்ட நேர விரயம் மற்றும் நீதிமன்றச் செலவுகளுக்காக 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விவாகரத்து ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பிணைப்பிலிருந்து விடுபட உடனடியாக அந்தப் பெண் 50,000 ரூபாயை ரொக்கமாக வழங்க, புனே குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.
வழக்கமாக கணவரிடம் ஜீவனாம்சம் கேட்கும் பெண்களுக்கு மத்தியில், தன்னுரிமைக்காகக் கணவருக்கே பணம் கொடுத்துப் பிரிந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
