கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியும், ஜெய்சங்கரன் (23) என்ற மகனும், மகளும் உள்ளனர். ஜெய்சங்கரன், இளங்கலை படிப்பை முடித்து, மேற்படிப்புக்காக காத்திருந்த நிலையில், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருபக்க குடும்பங்களும் இவர்களது காதலை ஏற்று, திருமணத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெய்சங்கரன் தனது காதலியுடன் அடிக்கடி செல்போனில் உரையாடிவந்தார். சில நாட்களாக அவர்களுக்கு இடையே  தகராறுகள் ஏற்பட்டுள்ளன. வீடியோ கால் வழியே ஏற்பட்ட தகராறு, உயிரிழப்புக்கு வழிகாட்டியது. நேற்று மதியம், ஜெய்சங்கரன் வீட்டு மாடியில் உள்ள அறையில் இருந்து தனது காதலியுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் உரையாடியுள்ளார். பேசும் போது மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையை கழுத்தில் கட்டி தூக்குப்போடுவது போல் நடித்துள்ளார்.

அவரது எண்ணத்துக்கு மாறாக, போர்வை கழுத்தை இறுக்கியதால் திடீரென சுவாசம் குறைந்து உயிருக்கு போராடியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட தாயார் அறையைத் திறக்க முயன்றும் முடியவில்லை. உடனே கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் ஜெய்சங்கரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இது பற்றிய தகவல் பெற்ற நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெய்சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.