காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூபதி (21), அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 11ஆம் தேதி, இருவருக்கும் இடையே காதல் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. தகராறின்போது, மாணவி “இனிமேல் உன்னோடு பேச மாட்டேன், உன்னை காதலிக்க மாட்டேன்” எனக் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பூபதி, அதே தினம் இரவு 7 மணி அளவில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரு குடும்பங்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, பூபதியின் தற்கொலைக்கு காரணம் தானே எனக் குற்றவுணர்வில் சிக்கிய மாணவி, நேற்று அதிகாலை, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பெற்றோர் அலறியடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். உடனே மாணவியை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

தகவல் அறிந்த, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.