ஜெர்மனியின் பெர்லின் மிருகக்காட்சிசாலையில் வசித்து வரும் ‘பாதூ’ என்ற பெண் கொரில்லா, தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடி உலக சாதனை படைத்துள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பாதூ, தற்போது மனித பராமரிப்பில் வாழும் உலகின் மிக வயதான கொரில்லாவாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மேலும் காடுகளில் வாழும் கொரில்லாக்கள் பொதுவாக 35 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும் நிலையில், முறையான பராமரிப்பு மற்றும் உணவு முறையினால் பாதூ இந்த நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளது. இதன் முதுமை மற்றும் ஆரோக்கியம் காரணமாக, இது தற்போது பெர்லின் பூங்காவின் ஒரு முக்கிய அடையாளமாகவும், உயிரினப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதராகவும் பார்க்கப்படுகிறது.
இதனால் பாதூவின் நீண்ட கால வாழ்க்கை வரலாறு பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கொண்டது. 1974-ஆம் ஆண்டில் பெர்லின் பூங்காவில் பிறந்த முதல் கொரில்லாவை ஈன்றெடுத்த பெருமையும் இதையே சாரும். இதன் முதல் குட்டி 2001-இல் இறந்துவிட்ட போதிலும், பாதூவின் பேத்தி இன்றும் அதே பூங்காவில் அதனுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெர்லின் பூங்காவின் பழமையான விலங்காகத் திகழும் இந்தப் பாட்டி கொரில்லா, காடுகளில் அழிந்து வரும் தன் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்னமாகத் திகழ்கிறது. இதன் பிறந்தநாளை முன்னிட்டு பூங்கா நிர்வாகம் இதற்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன சிறப்பு விருந்தினை அளித்து கௌரவித்தது.
