உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வனத்துறை அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால் என்ற அந்த அதிகாரி, ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணிடம் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
மேலும் தான் ஒரு வனத்துறை அதிகாரி என்பதால், அடர்ந்த காட்டின் இயற்கை எழிலைச் சுற்றிக் காட்டுவதாகவும், அழகான இடங்களைப் புகைப்படம் எடுக்கலாம் என்றும் ஆசை காட்டி அந்தப் பெண்ணை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கடந்த ஆறு மாதங்களாகத் திருமண வாக்குறுதி அளித்து அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணத்தைப் பற்றி வற்புறுத்திக் கேட்டபோது, அந்த அதிகாரி அவரைத் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அப்பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வனத்துறை அதிகாரி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
