கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், பிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் – ஷஹ்லா தம்பதியினர், தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த பழைய உணவைச் சூடுபடுத்திச் சாப்பிட்டுள்ளனர்.

மேலும் உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே குடும்பத்தினர் அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூத்த மகள் லஸ்னா உயிரிழந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்துள்ளனர். பிரிட்ஜில் நீண்ட நேரம் வைக்கப்பட்டிருந்த உணவு கெட்டுப்போனதால் ஏற்பட்ட ‘புட் பாய்சனிங்’ காரணமாகவே சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் முறையாகப் பராமரிக்கப்படாத அல்லது நீண்ட நாட்களாகப் பிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகளால் ஏற்படும் ஆபத்து குறித்துச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.