தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் திமுக அரசு மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டதாக பகிரங்கமாக கூறியிருந்தார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் திமுக அரசு மிரட்டியதால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனவும் ஆனால் நடிகர் விஜய் எந்த மிரட்டலுக்கு அடிபணியாமல் அஞ்சாமல் தைரியமாக அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் கூறினார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக கட்சியின் அமைச்சர்களான ஐ பெரியசாமி மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோர் ரஜினிகாந்துக்கு எந்தவித மிரட்டலும் திமுக தரப்பிலிருந்து வரவில்லை என விளக்கம் கொடுத்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே நடிகர் ரஜினி ரசிகர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் இது தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அந்த போஸ்டரில் காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டு விட்டோம் தலைவா. வேதனை வெட்கம் அவமானம். காலம் பேசாதே நிச்சயம் பதில் சொல்லும். களத்தில் சந்திப்போம் கதம் கதம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
