அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசா ஓபன் எம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 61 வயதான கீத் மெக்அலிஸ்டர் என்பவர், தனது கழுத்தில் உலோக சங்கிலியை அணிந்தபடி எம்ஆர்ஐ அறைக்குள் நுழைந்துள்ளார்.

அந்த நேரத்தில், அவரது மனைவி அட்ரியென் மெக்அலிஸ்டர், தனது மூட்டு வலி பிரச்சனைக்காக பரிசோதனைக்காக ஸ்கேன் செய்து கொண்டிருந்த நிலையில், கணவரை அழைத்து உதவ சொல்லி, உள்ளே வருமாறு கூறியிருந்தார். ஆனால், இயந்திரத்தின் மிகுந்த காந்த சக்தி, சங்கிலியை இழுத்து, அவரை நேரடியாக எம்ஆர்ஐ கருவியில் மோதி விழச் செய்தது.

சம்பவம் நடந்த அந்த சில நிமிடங்களில்  கீத் மெக்அலிஸ்டர் மயங்கி விழுந்தார்.  “அவர் கை அசைத்து விடை கூறினார்…” என உணர்ச்சி மாறாமல் தனது கணவர் இறந்த நொடியை அவரது மனைவி  விவரித்துள்ளார்.

டெக்னீஷனும் உதவ முயற்சித்தாலும், இயந்திரத்தின் விசைக்கும் காந்த சக்திக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செய்ய இயலவில்லை. உடனடியாக 911க்கு அழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும்,பிற்பகல் 2.36 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற எம்ஆர்ஐ சம்பந்தப்பட்ட விபத்துகள் இனி வருங்காலங்களில் நிகழக்கூடாது என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2001-ல் நியூயார்க்கில் 6 வயது சிறுவன் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் எம்ஆர்ஐ கருவிக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்தார்.

எம்ஆர்ஐ கருவி மிக வலுவான காந்தப்புலத்துடன் செயல்படுவதால், எந்தவொரு உலோகப் பொருட்களும் அதன் அருகில் கொண்டுவரக்கூடாது என்பதற்கான சுய பாதுகாப்பு நடைமுறைகள் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்போதைய விசாரணையில், கீத் எவ்வாறு பாதுகாப்பு சோதனைகள் இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பதைப் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.