உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவர் வீர்பாலை கொலை செய்துவிட்டார். காரணம், அவர்களின் ரகசிய காதல் உறவுக்கு வீர்பால் தடையாக இருந்ததுதான். சுனிதா என்ற அந்த பெண்ணும், அவரது காதலன் ஆஷிஷ் (அன்ஷு) என்ற 22 வயது இளைஞனும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தனர். நான்கு மாதங்களுக்கு முன், வயலில் நெல் நடவு செய்யும் போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது காதல் உறவாக மாறியது.
சுனிதா, தன் கணவருக்கு மது கொடுத்து வயலுக்கு அனுப்பிவிட்டு, ஆஷிஷை வீட்டுக்கு அழைப்பார். ஒரு நாள், வீர்பால் இருவரையும் தவறான நிலையில் பார்த்துவிட்டு சுனிதாவை அடித்தார். இதனால் கோபமடைந்த சுனிதா, கணவரைக் கொல்ல முடிவு செய்தார். ஆஷிஷை, “நீ என் கணவரைக் கொல்லாவிட்டால் நான் தற்கொலை செய்வேன்” என்று மிரட்டி, கொலைக்கு தூண்டினார். அக்டோபர் 12 இரவு, வயலில் தூங்கிக் கொண்டிருந்த வீர்பாலை ஆஷிஷ் கழுத்தைப் நெரித்து கொன்றார்.
மறுநாள் காலை, கிராம மக்கள் வயலில் வீர்பாலின் உடலைப் பார்த்தனர். சுனிதா அங்கு வந்து, உடலருகே அழுது, “நீங்கள் என்னை விட்டுப் போய்விட்டீர்கள்” என்று கதறினார். ஆனால், போலீஸுக்கு தகவல் தர வேண்டாம் என்று கூறி, உடலை மறைக்க முயன்றார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வீர்பாலின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சுனிதாவையும் ஆஷிஷையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
