உத்தரப்பிரதேச உள்ள பி.டி. நகர் பகுதியில், அண்ணன் தனது தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யம் (22) என்ற இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் அடிக்கடி மற்றவர்கள் மீது கல் எறியும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று தனது அண்ணன் சிவம் வீட்டிற்குச் சென்ற சத்யம், அங்கிருந்து நகர்ந்து செல்ல மறுத்து சிவம் மீது கல்லை வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவம், கத்தியால் தனது தம்பியை சரமாரியாகக் குத்தினார்.
இச்சம்பவம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்தும், அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் சத்யத்தைக் காப்பாற்ற முன்வரவில்லை. படுகாயமடைந்த சத்யம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தத் தாயை நிலைகுலையச் செய்துள்ளது. கணவனை இழந்து வீட்டு வேலை செய்து பிள்ளைகளை வளர்த்த ஆஷா தேவி, தற்போது ஒரு மகனைப் பறி கொடுத்துவிட்டு, மற்றொரு மகன் சிறைக்குச் செல்வதைக் கண்டு யாரிடம் நீதி கேட்பதென்று தெரியாமல் தவிக்கிறார்.
தனது இளைய மகன் மனநலச் சிகிச்சையில் இருந்தவர் என்றும், மூத்த மகன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தவர் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். தகவலறிந்த காவல்துறையினர், தப்பியோடிய சிவத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு சிறிய வாக்குவாதம் மற்றும் கல் வீச்சால் தொடங்கிய இந்த மோதல், ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
