இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்க வந்த ஜப்பான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்தபடி இருந்த ஜப்பானியப் பயணிகளைச் சூழ்ந்துகொண்ட ஒரு கும்பல், அவர்களை நோக்கி ஆபாசமாகக் கூச்சலிட்டு, அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் உடை மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்தி நடந்த இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாரணாசியின் தசாஸ்வமேத் காட் பகுதியில் இருந்த அந்த ஜப்பானியப் பயணிகள், கங்கை நதியில் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தியதாக எழுந்த ஆதாரமற்ற வதந்தியே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நதியை அசுத்தப்படுத்தினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும், ஆவேசமடைந்த கும்பல் மிரட்டியதால் பயந்துபோன ஜப்பானியப் பயணிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். விருந்தினரே தெய்வம் எனப் போற்றப்படும் இந்தியாவில், சுற்றுலாப் பயணிகளிடம் ஆதாரமில்லாமல் இப்படி அநாகரீகமாக நடந்துகொண்டது சுற்றுலாத் துறையினரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.