சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இந்தியாவின் நடுத்தர வர்க்க குடும்பங்களின் விருப்பமான காரான மாருதி ஆல்டோ 800, என்ஜின் இல்லாமலேயே சாலையில் சீறிப்பாயும் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு வாகனத்தின் இதயமாகக் கருதப்படும் என்ஜின் அந்த காரில் இல்லாத நிலையிலும், அது அதிவேகமாகச் செல்வது பார்ப்பவர்களுக்கு இது மாயமா அல்லது மிராக்கிளா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், அந்த காரை ‘டார்சன் தி வண்டர் கார்’ திரைப்படத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

அந்த வீடியோவின் ஒரு பகுதியில், கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதன் முன்பக்க மூடி திடீரென மேலே தூக்கிக் கொள்வதால், ஓட்டுநரின் பார்வை முழுமையாக மறைக்கப்படுகிறது. இதனால் ஓட்டுநர் ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி காரை ஓட்டும் அபாயகரமான சூழல் ஏற்படுகிறது.

இந்த அலட்சியமான செயல் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான சோதனைகளை பொதுச் சாலைகளில் மேற்கொள்வது சட்டப்படி குற்றம் எனவும், பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் இத்தகைய விபரீத முயற்சிகள் உயிருக்கே உலையாக முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.