குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு அருந்திய 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தாஹோத் மாவட்டத்தில் உள்ள அப்லோட்  கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருமண விருந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, விருந்தினர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, குமட்டல், வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்ததால் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், உடனடியாக மருத்துவக் குழுவினரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

பாதிப்பு தீவிரமாக இருந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவசர ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு கிராமத்திலேயே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, சிகிச்சையில் இருப்பவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரி கூறுகையில், திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உணவு சமைக்கப்பட்ட இடம் மற்றும் சுகாதார முறைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், உணவை முறையாக சேமிக்காததே பாக்டீரியா தொற்றுக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோடை காலத்தில் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் உணவைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, அதிக வெப்பம் காரணமாக உணவுகள் விரைவாகக் கெட்டுப்போக வாய்ப்புள்ளதால், சுகாதாரமான முறையில் உணவைத் தயாரிப்பதையும், முறையாகச் சேமிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கிராமத்தில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.