கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் உடல்களை மீட்பதற்கான பணி, சிறப்பு விசாரணைக் குழு (SIT) தொடங்கப்பட்டது.
48 வயதான முன்னாள் துப்புரவுத்தொழிலாளி ஒருவர், 13 இடங்களில் பல மனித உடல்களை புதைத்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, SIT அதிகாரிகள் அவரது வழிகாட்டுதலின் பேரில் தோண்டும் பணிகளை மேற்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை, தர்மஸ்தலா காவல் நிலையம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஒத்துழைப்புடன், SIT குழு முதலாவது இடத்தில் தோண்டத் தொடங்கியது. குளிக்குமிடத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த பணிகள், மழையால் சிரமமானதாக இருந்தது. வெறும் இரண்டு முதல் மூன்று அடி தோண்டியதும் நீர் தேங்கி சேறு பெருகியது. மாலை 6 மணிக்கு வரை பல மணிநேரம் தோண்டியும் எந்த மனித எச்சங்களும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் இதைத் தொடர்ந்து இடம் இடமாக தோண்டி முழுமையான விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக SIT தற்போது ஒவ்வொரு சுட்டிக்காட்டப்பட்ட இடத்தையும் பாதுகாத்து, DNA மாதிரிகள், குற்றவியல் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. தர்மஸ்தலா பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அமைதியாக இருக்கும்போதிலும், இந்த விசாரணை மாநிலத்தையே அதிர்வூட்டியுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் தேடுதல் நடவடிக்கை விரைவில் தொடரும் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
