மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல். முருகன் நேற்று  ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். இங்கு காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகப் பூஜையில் கலந்து கொண்ட அவர், பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல். முருகன் அவர்கள் கூறியதாவது: “ராமேஸ்வரத்திற்கு புதிய அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. பாம்பன் கடலின் மீது புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாசி வளர்ப்பு, இறால் குஞ்சுகள் வளர்ப்பு, ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இலங்கை கடற்படையினரின் இடையூறுகளைத் தவிர்க்க முடிந்துள்ளது. இருப்பினும் சில சமயங்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்,” என்றார்.

தொடர்ந்து அவர் மேலும் கூறியதாவது: “திமுக அரசு மக்களின் உயிருடன் விளையாடும் அரசியலை செய்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி வழங்கப்படவில்லை என பொய்யான குற்றச்சாட்டுகளை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நாட்டிலிருந்து பிரிக்க முயலும் திமுக, கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வருடங்கள் மத்திய அரசில் இருந்தபோதும் எந்த முயற்சியும் செய்யவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டபோது திமுக தலைவர் கருணாநிதி மௌனமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற கூட்டம் குறித்து அவர் கூறியதாவது:
“கரூரில் நடைபெற்ற விஜய்யின் வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒரு துயர சம்பவம். இதை அரசியல் செய்வது எங்களது நோக்கம் அல்ல. ஆனால் திமுக நாடகம் ஆடுகிறது. சட்டமன்றத்திலும் அதேபோன்ற நாடகம் நடந்தது. விஜய்யின் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்த இடத்தில் ஏதோ சம்பவம் நிகழும் என மக்கள் மத்தியில் பேச்சு பரவியது. அதன்படியே அந்த துயரம் ஏற்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும்,” என்றார்.