புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வந்தடைந்த விதம், அவரது முந்தைய பொதுக்கூட்ட நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.

கரூர், நாமக்கல் போன்ற முந்தைய மக்கள் சந்திப்புகளின்போது, அவர் பிரம்மாண்டமான பிரச்சாரப் பேருந்தில் பேரணியாகச் செல்வது வழக்கம். ஆனால், கரூர் சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமாக, தற்போது அவர் தனது பிரச்சார வாகனத்தை நிகழ்ச்சி நடக்கும் உப்பளம் பகுதியில் முந்தைய நாள் இரவே நிறுத்திவிட்டு, இன்று சென்னையிலிருந்து சாலை மார்க்கமாகக் சிறிய காரில் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகப் பயணித்து வருகிறார்.

இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், முந்தைய கூட்டங்களில் தனக்குப் பின்னால் 20 கார்கள் அணிவகுத்து வர, பவுன்சர்களுடன் மெதுவாக ஊர்ந்து சென்று, தொண்டர்களைத் திரட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது இது போன்ற பிரம்மாண்டமான விஷயங்கள் எதுவும் புதுச்சேரி சந்திப்பில் காணப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணம், கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாடம் கற்றுக்கொண்டாரா? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முந்தைய சந்திப்புகளில் பொதுமக்களுக்குச் சிக்கலாக இருந்த விஷயங்களைத் தற்போது அவர் மாற்றிக்கொண்டு, பிரச்சார முறைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.