தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 5000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. நடிகர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக அவர் பிற அரசியல் கட்சிக்கு சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் வரும் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்துவரும் நிலையில் அவரது ரசிகர்களும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

 

இந்த நிலையில் நடிகர் விஜயின் தீவிர பெண் ரசிகை ஒருவர் அவருக்காக மொட்டை அடித்து தற்போது நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அதாவது புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததையடுத்து, முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் ரசிகை, விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காகத் தனது கூந்தலை மொட்டையடித்து நேர்த்திக் கடனைச் செலுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய அந்த பெண், தன்னுடைய முடியை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கப்போவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதன்பிறகு “சின்ன வயதிலிருந்தே தளபதி அண்ணனை மிகவும் பிடிக்கும். கரூர் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு புதுச்சேரியில் நடக்கும் இந்தக் கூட்டம் எந்த அசம்பாவிதமும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டும், பாண்டிச்சேரிக்கு மாற்றம் வர வேண்டும், விஜய் விரைவில் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்,” என்று தெரிவித்தார். மேலும், இது யாருடைய தூண்டுதலின் பேரிலும் செய்யவில்லை என்றும், இது தனது தனிப்பட்ட விருப்பத்தின் வெளிப்பாடு என்றும் அவர் கூறினார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.