மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நடைபெறும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் போக்குவரத்துச் செலவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனால் கிழக்கு இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் ஜவுளி, மருந்து மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 50 சதவீதம் சரிந்துள்ளது. போதிய இடவசதி இல்லாததால் சுமார் 600 சரக்குக் கொள்கலன்கள் (Containers) துறைமுகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, இது ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு 497 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ரிலீஃப்’ என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குச் சரக்கு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ஒரு ஏற்றுமதியாளர் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
போரினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை ஈடுகட்டி, மீண்டும் ஏற்றுமதியைச் சீரமைக்க இந்த நிதி உதவி பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
