உலகளாவிய அளவில் ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில், அர்ஜெண்டினாவில் இருந்து பயணம் தொடங்கிய ‘எம்.வி.ஹோண்டியஸ்’ என்ற நெதர்லாந்து சொகுசு கப்பலில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயணித்த 5 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், துரதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தக் கப்பலில் பணியாற்றிய இரு இந்தியர்களுக்கும் ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ​இந்த வைரஸ் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போதைக்கு அங்கிருந்து இந்தியாவுக்குத் தொற்று பரவும் அபாயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. பொதுவாக எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சங்கள் மூலம் காற்றில் கலக்கும் வைரஸ் துகள்களைச் சுவாசிப்பதாலேயே இந்தத் தொற்று ஏற்படுகிறது.

இது கொரோனா போல எளிதில் பரவாது என்றாலும், பாதிக்கப்பட்ட நபருடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தால் மனிதர்களுக்கிடையேயும் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல், சோர்வு, தசை வலி போன்ற ஆரம்ப அறிகுறிகளுடன் தொடங்கும் இந்தத் தொற்று, சில நாட்களில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு வீரியமிக்கது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.